internet

img

எந்தத் தமிழ் எழுத்துருவையும் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்

தமிழ் மொழியைக் கணினியில் உள்ளிட எண்ணற்ற தட்டச்சு மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. டேம் (Tam), டேப் (Tab),லிபி (SreeLibi), பாமினி, செந்தமிழ், வானவில், இண்டோவேர்ட்,ஒருங்குறி (Unicode) ஆகியவை தற்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கும் எழுத்துருக் குறிமுறை(Font Encoding)களாகும்.


எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு, தமிழ் 99, ஆங்கில எழுத்துக்கள் வழியாக தமிழை உள்ளிடும்ஒலியியல் (பொனடிக்) முறை, பாமினி தட்டச்சு ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர வேறு பல எழுத்துருமற்றும் தட்டச்சு வகைகளும் சிலரால் பயன்படுத்தப்படுகின்றன. உலக அளவில் ஒரே விதமான எழுத்துரு முறை இருக்கவேண்டும் என்பதற்காக ஒருங்குறி (Unicode) எழுத்துரு முறை கட்டமைக்கப்பட்டது. 


இணைய வசதி மற்றும் பயன்பாடு காரணமாக யுனிக்கோட் எழுத்துரு வகை தற்போது அனைத்து தொழில்நுட்ப சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இன்றைய நிலையில் யுனிக்கோட் எழுத்துருக்களை விண்டோஸ் கணினிகளில் தட்டச்சு செய்ய இலவச மென்பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. அவற்றில் எ¬¬¬ கலப்பை, NHM

ரைட்டர், இனிய தமிழ், அழகி, குறள் தமிழ் செயலி மற்றும்தமிழ்நாடு அரசு விசைப்பலகை ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.


மேற்கூறிய மென்பொருள்களிலிருந்து, தமிழுக்கு அவசியமான சில தேவைகளை நிறைவேற்றும் சிறப்பான வசதிகளைக் கொண்ட ஒரு மென்பொருள் இனிய தமிழ். கணினித் துறையில் அவ்வப்போது ஏற்படும் முன்னேற்றத்திற்கு ஏற்ப தொடர்ச்சியாக மென்பொருளை அப்டேட் செய்யவேண்டியது அவசியம். அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட இனிய தமிழ் மென்பொருள் அவ்வப்போது பிரச்சனைகளை கவனித்து சரிசெய்து வருவதுடன், புதிய வசதிகளையும் சேர்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விண்டோஸ் வகை இயங்குதளங்களில் பெரும்பாலான மென்பொருள்களில் சிறப்பாக செயல்படுகிறது.

இம்மென்பொருளைக் கணினியில் இயக்கும் ஒவ்வொரு முறையும், தமிழ் உயிர் எழுத்துக்களின் வடிவத்தில் முகப்புத் திரைதோன்றுவது புதுமையான வடிவமைப்பாகும்.


இனிய தமிழ்: வசதிகள்

யுனிக்கோட் எழுத்துருவுடன், டேம் மற்றும் டேஸ்16 எழுத்துருக்களிலும் எளிதாக தட்டச்சு செய்யலாம். பழைய மற்றும் புதிய தட்டச்சு, ஒலியியல், தமிழ் 99 ஆகியவற்றில் உங்களுக்கு தெரிந்தமுறையைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்யும்போது ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாறி மாறிதட்டச்சு செய்வதற்கு வசதியாக குறுக்குவிசையை (Shortcut Key) நமக்கு விருப்பான முறையில் அமைத்துக் கொள்ளலாம். 


இனிய தமிழ் மென்பொருள் மூலமாக நாம் தட்டச்சுசெய்யும்போது தவறுதலாக சில வார்த்தைகள் எழுத்துப்பிழையாக அமைந்தால் அவற்றை தானாகவே சரி செய்து கொள்ளும்படி வசதி உள்ளது. தட்டச்சு மென்பொருளுடன் கூடுதலாக மாற்றி என்ற வசதி உள்ளது. இம்மென்பொருள் தமிழின் பிரபல எழுத்துரு வகைகளை ஒன்றிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றுவதற்கு உதவுகிறது. டேம், டேப், லிபி, பாமினி, செந்தமிழ், வானவில், இண்டோவேர்ட், யுனிக்கோட் முதலிய பிரபல எழுத்துருக்களில் உள்ள வேர்ட் டாக்குமெண்ட் அல்லது டெக்ஸ்ட்டை உள்ளிட்டு மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம்.அடுத்ததாக எண்ணிலிருந்து எழுத்தாக மாற்றுவது, எழுத்திலிருந்து எண்ணாக மாற்றுவது என்ற வசதி. மிகப்பெரிய எண் அதாவது 91 இலக்கம் கொண்ட எண்ணைக்கூட எழுத்தாக மாற்றித்தந்து நம்முடைய சிரமத்தைக் குறைக்க உதவுகிறது.


விருப்ப என்கோடிங்

யுனிக்கோட் (Unicode), டேஸ் 16 (TACE 16) மற்றும் டேம் (TAM) வகை எழுத்துரு குறிமுறைகளை மட்டுமே தட்டச்சு செய்யும் வசதியைத் தந்துவந்த இம்மென்பொருள், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற எழுத்துரு வகையை தட்டச்சு செய்வதற்கு உதவும் வகையில், விருப்ப எழுத்துருக் குறிமுறையை இணைக்கும் என்கோடிங் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.


இம்மென்பொருளைப் பயன்படுத்தி நமக்கு விருப்பமான வேறு வகை எழுத்துருவை தட்டச்சு செய்ய அதற்கென உள்ள மூல மென்பொருளைப் பயன்படுத்தாமல் இனிய தமிழ் மூலமாகவே தட்டச்சு செய்து கொள்ளலாம். இதனை செய்வதற்கு சற்றுப் பொறுமையும் காலமும் மட்டுமே தேவை.இந்த என்கோடிங் மென்பொருள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி எழுத்துக்களை வரிசையாக இணைப்பதற்கான இடமாகும். அதற்குக் கீழே New என்பதைக் கிளிக் செய்தால் நாம் சேர்க்கும் எழுத்துரு முறைக்கு பெயரைக் குறிப்பிட்டு, Font என்பதில் சேர்க்கவிரும்பும் எழுத்துருவை தேர்வு செய்து Ok கொடுக்கவும். வலதுபுறத்தில் இப்போது நீங்கள் தேர்வு செய்த எழுத்துரு காட்டப்படும். அதில் ஒவ்வொரு எழுத்தாக தேர்வு செய்து Insert கொடுக்கவும். இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து வரும் கா, கொ,கௌ போன்ற எழுத்துக்களை Insert to Compose என்பதைக் கிளிக் செய்து கீழ் உள்ள பெட்டியில் ஒன்று சேர்த்து பிறகு Insert Composd Text என்ற பட்டனை அழுத்தி சேர்க்கவும்.


இந்த முறையில் அனைத்து எழுத்துக்களையும் சேர்த்த பிறகு, அதனை சேவ் செய்து கொள்ளவும். Export என்ற பட்டனை அழுத்தி என்கோடிங் கோப்பை கணினியில் வேறு டிரைவ்களில் சேவ் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இந்த என்கோடிங் கோப்பை வேறு கணினிகளில் உள்ள இனியதமிழ் மென்பொருளில் Import பட்டனைப் பயன்படுத்தி உள்ளிட்டுப் பயன்படுத்தலாம். ஒருமுறை எழுத்துக்களை சரியாக கோர்த்து இணைத்து (Encoding) சேமித்துவைத்துவிட்டால், அதனைப் பயன்படுத்தி அந்த வகை எழுத்துருவின் பிற வடிவங்களுக்கும் (Font Styles) பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியை மொத்தமாக ஒரே சமயத்தில் செய்ய முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக நேரம் கிடைக்கும் போது செய்து அவ்வப்போது சேமித்துவைத்துக் கொண்டே வரலாம்.


இனிய தமிழ் முழுப்பதிப்பு மற்றும் மினி என்று இரண்டு வகைகள் உள்ளன. உங்கள் தேவைக்கு எதுவேண்டுமோ அதனை பதிவிறக்கலாம். செல்பேசிகளில் தட்டச்சு செய்வதற்கான இனிய தமிழ் ஆண்ட்ராய்ட் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.


கட்டணமில்லாமல் பல வசதிகளைத் தரும் இம்மென் பொருளை புதுவையைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துக்கருப்பன் அவர்கள் உருவாக்கியுள்ளார். இம்மென் பொருளை பயன்படுத்த விரும்பினால் http://www.iniyatamil.com/Downloads என்ற தளத்தில், உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


===என்.ராஜேந்திரன்===

;